வழிபாடு

பூண்டி பேராலயத்தில் புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா 30-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-08-19 05:44 GMT   |   Update On 2022-08-19 05:44 GMT
  • 9-ந்தேதி மரியாள்- தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருப்பலி.
  • 9-ந்தேதி பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தன்னை நாடி வந்து வேண்டுபவர்களுக்கு, வேண்டியவை எல்லாம் தரும் வல்லமை படைத்த பூண்டி மாதாவை பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று அனைவரும் போற்றி அழைப்பர்.

இந்த பேராலயத்தில் பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை சிறு சப்பரத்தில் பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்டு, பூண்டி மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் சுமந்து வருவார்கள். புனித கொடியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ஏற்றி வைப்பார். தொடர்ந்து மரியாள்- புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ் ஆன்மிக தந்தையர் அருளானந்தம், ஜோசப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். திருவிழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி ஆகியவற்றை பல்வேறு அருட்தந்தையர்கள் நிறைவேற்றுவர். பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் பிஷப் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் பூண்டி அன்னையின் தேர் பவனியை பிஷப் தொடங்கி வைப்பார். 9-ந்தேதி மரியாள்- தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுவார். அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News