வழிபாடு

பனிமயமாதா ஆலயத்தில் அடுத்த ஆண்டு தங்கத்தேர் பவனி: பிஷப் ஸ்டீபன் தகவல்

Update: 2022-08-11 07:40 GMT
  • தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது.
  • இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமய மாதா பேராலயத்தில் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தங்கத் தேர் பவனி நடைபெறும் என பிஷப் ஸ்டீபன் தெரிவித்தார்.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெருவிழாவின் போது 10-ம் நாள் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்திலும், 11-ம் நாளான ஆகஸ்டு 5-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் ஆண்டுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நினைவு ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. தொடர்ந்து 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது.

15-வது முறையாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. அடுத்த ஆண்டு (2023) 16-வது முறையாக தூத்துக்குடி நகரில் பனிமய மாதாவின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News