வழிபாடு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2023-04-02 07:12 GMT   |   Update On 2023-04-02 07:12 GMT
  • 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
  • 9-ந்தேதி \ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஏசுகிறிஸ்து சிலுவை பாடுகளையும், உயிர்தெழுததையும் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள்.

தவக்காலத்தில் இறுதி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனிதவாரத்தின் முதல் நாளான இன்று குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

பாளை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனியில் ஏராளமானோர் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர். இதே போல் கதீட்ரல் பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

மேலும் பணகுடி, திசையன்விளை, அம்பை, வி.கே.புரம், சேரன்மகாதேவி, ராதாபுரம், கூடங்குளம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

தூத்துக்குடியில் இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் முன்னிலையில் குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.

பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி கிறிஸ்தியா நகரம் சேகரம் சார்பில் குருத்தோலை கீதபவனி ஆலயம் முன்பு இருந்து புறப்பட்டது. ஓசன்னா என்ற பாடலுடன் புறப்பட்ட ஊர்வலத்தில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஊர் முழுவதும் சுற்றி வந்த பவனி பின்பு வடக்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார், சந்தையடிதெரு வழியாக ஆலயத்தை வந்து அடைந்தது.

இதேபோல பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்தில் சார்பாக சிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பவனி ஊர் முழுவதும் மற்றும் புதுமனை வழியாக வளம் வந்து மீண்டும் ஆலயம் அடைந்தது. உடன்குடி அருகே உள்ள வேதகோட்டை விளை, சந்தையடியூர், தங்கையூர், கொட்டங்காடு போன்ற கிராமப்புற பகுதியி லும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து ஆலயங்க ளிலிருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய குருவானவர் டேனியல் தனசன், புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஆலங்குளம், அண்ணாநகர், நல்லூர், அடைக்கலப்பட்டணம் , ரட்சணியபுரம், ஊத்துமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சி. எஸ். ஐ. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலை களை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர்.

கடையம் அருகே உள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரி திருத்துவ ஆலயத்தில் மேட்டூர் சேகர உதவி குரு ஜோயல் சாம் மெர்வின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

பல்வேறு வீதி வழியாக சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 6-ந்தேதி பெரிய வியாழன் கடைப்பிடிக்கப்படு கிறது. இதையொட்டி பாதம் கழுவுதல் நடைபெறுகிறது. 7-ந்தேதி வெள்ளிக்கிழமை ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிலுவை பாதை ஊர்வலம் நடை பெறும்.

9-ந்தேதி ஏசுகிறிஸ்து உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Similar News