வழிபாடு

பழனியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம்

Published On 2023-05-20 08:31 GMT   |   Update On 2023-05-20 08:31 GMT
  • மலேசியாவில் உள்ளது புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில்.
  • பிரசாத பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், அங்குள்ள கோவில்களுக்கு தமிழக கோவில்களில் இருந்து 'வஸ்திர மரியாதை' செய்யப்படும் என்று தமிழக சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு பழனி முருகன் கோவிலில் இருந்து பிரசாதம், பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம் மற்றும் பூஜை பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், ராக்கால சந்தனம், கவுபீன தீர்த்தம், முருகன், வள்ளி-தெய்வானைக்கு பட்டு வேட்டி, துண்டு, சேலை, மலை வாழைப்பழம் மற்றும் பழங்கள் ஆகியவை தாம்பூல தட்டில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் சன்னதியில் மேற்கண்ட பிரசாத பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல பிரசாத பொருட்கள் கோவிலை சுற்றி வலம் வந்தது.

அதன் பின்னர் பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம் மற்றும் பூஜை பொருட்களை பழனி முருகன் கோவில் சார்பில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு பூஜை பொருட்களை அவர்கள் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News