வழிபாடு

நிழற்பந்தல் அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

சுட்டெரிக்கும் வெயிலால் பக்தர்கள் அவதி:பழனி முருகன் கோவிலில் நிழற்பந்தல் அமைக்கும் பணி

Published On 2023-03-18 05:04 GMT   |   Update On 2023-03-18 05:04 GMT
  • பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதுதவிர சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். சாதாரண நாட்களை தவிர்த்து முகூர்த்தம், வாரவிடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம் வழியாக பக்தர்கள் செல்லும், சுட்டெரிக்கும் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்க உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதியடைவதை தவிர்க்க பழனி முருகன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேற்கு வெளிப்பிரகாரத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பந்தல் அமைக்கப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்னர் அவற்றின் நிழலில் இளைப்பாறி செல்கின்றனர். அதேபோல் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News