வழிபாடு

பழனி முருகன் கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2022-12-04 06:15 GMT   |   Update On 2022-12-04 06:15 GMT
  • கார்த்திகை தீபத்திருவிழா 6-ம்தேதி நடைபெறுகிறது.
  • திருக்கார்த்திகை தீபம் அன்று தங்கரத புறப்பாடு நடைபெறாது.

பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில்களில் தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு வழக்கமாக 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல வேண்டும்.

இதேபோல் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், மதியம் 2 மணிக்கு குடமுழுக்கு நினைவரங்க படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும். தொடர்ந்து 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். பிற பாதைகளான மின்இழுவை ரெயில், ரோப்கார் சேவை வழக்கம்போல் செயல்படும். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News