வழிபாடு

மாசி திருவிழா: பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை மறுநாள் நடைபெறுகிறது

Published On 2023-03-05 12:08 IST   |   Update On 2023-03-05 12:08:00 IST
  • தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
  • 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் மாசித்திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதனையடுத்து தினமும் பக்தர்கள் பால், மஞ்சள் நீரை காலை, மாலை வேளைகளில் கம்பத்தில் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் கடந்த 28-ந்தேதி கோவிலில் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் இரவு சிம்மம், வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.

மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உற்சவர் திருக்கல்யாணம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6.40 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது. மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு அம்மன் வீதி உலா வருகிறார். 8-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை, மாலை வேளையில் தீச்சட்டி எடுத்து ரதவீதியை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதற்காக ரதவீதிகளில் தீச்சட்டி பானை, விறகு சுள்ளி விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News