வழிபாடு

அந்தோணியார்புரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ரூ.1 கோடியில் புதிய கோபுரம்

Published On 2023-01-20 05:15 GMT   |   Update On 2023-01-20 05:15 GMT
  • தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
  • 29-ம்தேதி தேர் பவனி நடக்கிறது.

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடியேற்றி வைத்தார். நற்செய்தி நடுவம் இயக்குநர் ஸ்டார்வின் மறையுரை நிகழ்த்தினார். அண்ணாநகர் பங்குத்தந்தை சகாயம், இன்னாசியார்புரம் குருமட பேராசிரியர் ஸ்டார்லிங், ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3-ம் நாள் விழாவான நேற்று ஆலயத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய ஆலய கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து திருப்பலி நடத்தினார். மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், பங்குத்தந்தை ஸ்டீபன் மரிய தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ரத்னாபுரம் பங்குத்தந்தை எஸ்.எம்.அமலதாஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை பவனி நடக்கிறது.

13-ம் நாள் திருவிழாவான வரும் 29-ம் தேதி காலை 5.30 மணிக்கு பாதிரியார் விளாடிமிர் டிக்ஸன் தலைமையில் சிறப்பு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும், பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகளும், 31-ம் தேதி மாலை 7 மணிக்கு பொது அசன விருந்தும் நடக்கிறது.

Tags:    

Similar News