வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா: யானை மீது புனித நீர் ஊர்வலம்

Published On 2022-09-27 04:42 GMT   |   Update On 2022-09-27 04:42 GMT
  • 5-ந்தேதி அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 5-ந்தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் கிணற்றில் இருந்து எடுத்து கொண்டு வரப்படும்.

அதன்படி நேற்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் புனித நீர் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

10-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி காலை 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்துக்கு மாலை சென்றடைந்து பரிவேட்டை நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

மேலும் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியை கோவில் நிர்வாகத்தினருடன் கன்னியாகுமரி பக்தர்கள் சங்கமும் இணைந்து செய்கிறது.

Tags:    

Similar News