வழிபாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணிக் கொடை விழா நாளை நடக்கிறது

Published On 2023-03-24 05:49 GMT   |   Update On 2023-03-24 05:49 GMT
  • நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
  • வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நாளை (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News