வழிபாடு
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமான மக்கள் தர்ப்பணம் செய்தனர்

இன்று மகாளய அமாவாசை கடலூர் கடற்கரை, ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2022-09-25 04:56 GMT   |   Update On 2022-09-25 04:56 GMT
  • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.
  • கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டனர்.

இதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை மற்றும் ஆறுகளில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் அனுமதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதியில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்கள் தர்ப்பணம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News