மகா சிவராத்திரி: ராமேசுவரம், சதுரகிரி கோவில்களில் குவிந்த பக்தர்கள்: விடிய விடிய சிறப்பு பூஜைகள்
- இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
- ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் தமிழகத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகராக கருதப்படும் இங்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்.
மகா சிவராத்திரியான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ராமநாதசுவாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் படிக லிங்க பூஜை நடந்தது.
சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் ஏராளமானோர் நீராடினர். காலை 9 மணிக்கு கேடயத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.
இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்க கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இன்று முதல் 21-ந்தேதி வரை மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சதுரகிரிக்கு செல்வதற்காக நேற்று இரவு முதலே மலை அடிவார பகுதியான தாணிப்பாறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
முன்னதாக பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. மாலை பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலிப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சதுரகிரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆனால் பக்தர்கள் இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.