வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-17)

Published On 2024-03-28 03:17 GMT   |   Update On 2024-03-28 03:17 GMT
  • மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்.
  • மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான்.

மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்

ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாத பிறை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மக்கா மாநகரம் வெற்றி கொள்ளப்படுகிறது. மறுநாள் பிறை 18-ம் தினம் புதன் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மாநகரம் புனிதம் குறித்து பிரகடனம் செய்கிறார்கள்.

அபூஷுரைஹ் (ரலி) அறிவிக்கிறார்: அம்ர் பின் ஸயீது என்பவர் (யஸீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் ராணுவத்தை அனுப்பியபோது, 'தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை எனது இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள்.

பின்னர் இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித நகரமாக்க வில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே ரத்தத்தை ஒட்டுவதோ, இதன் மரம். செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்கு ஒரு சிறு போர் நடத்தியதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், அவர் தெரிந்து கொள்ளட்டும், 'நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி அளிக்க வில்லை' என்று அவரிடம் கூறுங்கள். எனக்கு கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும்தான். இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய் தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு இங்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்:புகாரி)

மக்காவின் புனிதம் குறித்து நபி (ஸல்) பிரகடனம் செய்தபோதிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் மக்காவின் மண்ணை புனிதமாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் அளவைகளான ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் கிடைத்திட பிரார்த்தித் தேன்.' (அறிவிப்பாளர்: இப்னு ஜைத் (ரலி), நூல்:புகாரி)

'மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான். யுத்தம் செய்ய யாரும் அனுமதிக்கப் படவில்லை. இந்நகரின் முள் செடிகள் அகற்றப்படக்கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை மக்களுக்கு அறிவிப்பு செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது' (நூல்:புகாரி)

'வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப் படக்கூடாது ' (நூல்: புகாரி) என நபி (ஸல்) கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் மக்காவின் புனித எல்லைப் பகுதிகளில் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றைப் பேணி அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். புனித மக்காவின் வடக்குப் பகுதி 'தன்ஈம்' ஆகும். தெற்குப் பகுதி 'அளாஹ்' ஆகும். கிழக்குப்பகுதி ஜிஃரானா' ஆகும். வடகிழக்குப் பகுதி வாதிநக்லா' ஆகும். மேற்குப்பகுதி 'ஹூதைபிய்யா' ஆகும்.

Tags:    

Similar News