வழிபாடு

சுந்தரேசுவரர் திருமுகம் - மதுரை மக்கள் பரவசம்

Published On 2025-05-08 08:29 IST   |   Update On 2025-05-08 08:29:00 IST
  • மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
  • மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.

மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-

மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.

மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.

ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.

Tags:    

Similar News