வழிபாடு

பந்தக்கால் முகூர்த்தம் நடந்தபோது எடுத்தபடம்.

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா பந்தக்கால் முகூர்த்தம்

Published On 2023-02-07 12:02 IST   |   Update On 2023-02-07 12:02:00 IST
  • மார்ச் 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடக்கிறது.
  • மார்ச் 6-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

முன்பு ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்ட பிறகு இறைவன் மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்திற்கு பூஜைகள் செய்து கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரராக ஐக்கியமானதாக தல வரலாறு கூறுகிறது.

கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். மங்களாம்பிகை அம்மன் 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை சேர்த்து 72ஆயிரம் கோடி சக்திகளையும் உடையவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இக்கோவில் மகாப்பிரளயத்திற்கு பிறகு உலகில் தோன்றிய முதல் தலமாக கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி விநாயகர், முருகன், சாமி, அம்பாள் ஆகிய 4 தேரோட்டமும், 5-ந் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், 6-ந் தேதி மகா மககுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமமும், கணபதி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 2 பந்தக்காலுக்கு 16 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் வளாகம் மற்றும் விநாயகர் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News