வழிபாடு

அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்ததை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-06-03 04:09 GMT   |   Update On 2023-06-03 04:09 GMT
  • அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு மீண்டும் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று காலை அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி உற்சவ அம்பாளை கோவிலில் இருந்து வாகனத்தில் அலங்கரித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்திற்கு எடுத்து வந்தனர். ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை போன்றவை நடந்தது.

அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆராட்டு நிகழ்ச்சி மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, விஜயதசமி திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய ஐந்து முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும், 9 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெற்றது. நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு மீண்டும் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News