இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா 25-ந் தேதி தொடங்குகிறது
- நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாணம் 4-ந்தேதி நடக்கிறது.
- 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கோவில் மாநகரமான மதுரைக்கு எத்தனையோ புகழும், வரலாறுகளும் உள்ளன. பாண்டிய மன்னர்களின் மரபுகளில் ஒன்றாக மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்கு முன்பாக சிவபூஜை செய்வது வழக்கம். அதன்படி பாண்டிய மன்னராக முடி சூட்டுவதற்கு முன்பாக சிவபெருமானும், ராணியாக மீனாட்சி அம்மனும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்ட தலமே மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலின் மாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா இன்மையில் நன்மை தருவார் கோவிலில் வருகிற 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நாளை(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொட்டகை முகூர்த்தம் நடைபெறுகிறது.
24-ந் தேதி மாலை 7 மணிக்கு வாஸ்து சாந்தி, 25-ந் தேதி காலை 7.42 மணி முதல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தினசரி பிரியாவிடையுடன்-இன்மையில் நன்மை தருவார், மத்தியபுரி அம்மனுடன் காலையிலும், மாலையிலும் ரிஷப வாகனம், மரச்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான இன்மையில் நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாண வைபவம் 4-ந்தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.