வழிபாடு

ராமபிரான் காலடிபட்ட புனிதத் தலங்கள்

Published On 2025-04-03 09:20 IST   |   Update On 2025-04-03 09:20:00 IST
  • தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
  • சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.



அயோத்தி சக்கரவர்த்தி தசரதனுக்கு மகனாக பிறந்த ராமபிரான், 14 ஆண்டு வனவாசம் மற்றும் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கும் போராட்டம் காரணமாக, இந்திய தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவர் காலடிபட்ட சில முக்கிய இடங்களை இங்கே பார்க்கலாம்.


அயோத்தி

ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம் தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான்.

தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர். வட நாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

வாரணாசியில் இருந்து 189 கிலோமீட்டர் தூரத்தி லும், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கிறது. அயோத்தி, வாரணாசி யில் இருந்து லக்னோ செல்லும் ரெயில் மார்க்கத் தில் இருக்கிறது அயோத்தி ரெயில் நிலையம்.


பக்ஸர்

விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு இடையூறாக இருக்கும் தாடகையை அழிப்பதற்காக ராமரையும், லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் பலை, அதிபலை என்ற முக்கியமான இரண்டு மந்திரங்களை உபதேசித்த இடம் இதுவாகும்.

சித்தாசிரமம்', 'வேத சிரா', 'வேத கர்ப்பா', 'க்ருஷ்' என்று வேறு பெயர்களாலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து மொகல்சராய் செல்லும் ரெயில் மார்க்கத்தில் முக்கியமான ரெயில்நிலையம், பக்ஸர்.


அகல்யா குண்ட்

பல நூறு ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகல்யை, காட்டிற்குள் வனவாசம் வந்த ராமரின் காலடிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அந்த இடம் 'அகல்யா குண்ட்' என்று வழங்கப்படுகிறது.

சீதாமடி-தர்பங்கா ரெயில் மார்க்கத்தில், கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி, மேற்கே 15 மைல் தொலைவு சென்றால் அஹியா என்ற இடம் உள்ளது. இங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அகல்யா குண்ட் உள்ளது.


ஜனக்பூர்

மிதிலை நாட்டை ஆண்ட ஜனகரின், அரசாட்சி நடை பெற்ற இடம் இந்த ஜனக்பூர். இங்கிருந்த பெரிய மைதா னத்தில்தான். சீதையை மணப்பதற்காக சிவ தனுசை ராமர் முறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீதாமடி என்ற இடத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஜனக்பூர் உள்ளது.


வால்மீகி ஆசிரமம்

பெரும் வழிப்பறி கொள்ளையனாக இருந்து, பின் மனம் மாறி ராமபிரானின் காவியத்தை எழுதிய வால்மீகி முனி வர் வாழ்ந்த இடம் இதுவாகும். பிரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது.

மேலும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடுரில் உள்ள கங்கை கரையிலும், சீதாமடி அருகேயும் வால்மீகி முனிவர் வசித்ததாக சொல்லப்படுகிறது.


சித்திரக்கூடம்

ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது.ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, சீதை மற்றும் லட்சுமணனுடன் இந்த சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷி பெருமக்களுடன் ராமரும் தவம் இயற்றியதாக ராமாணயம் சொல்கிறது.

அலகாபாத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சித்திரக்கூடம் ரெயில் நிலையத்தில் இறங்கி, இந்த பகுதிக்குச் செல்லலாம்.


பஞ்சவடி

அயோத்தியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்தராமபிரான், சில முனிவர்களின் வேண்டுகோள்படி ஓரிடத்தில் தங்க சம்மதிக்கிறார். அது ஐந்து ஆலமரக்கூட்டம் இருக்கும் இடம். எனவே அது பஞ்சவடி என்று அழைக்கப்பட்டது.

இங்கிருந்துதான் சீதையை, ராவணன் கடத்திச் சென்றான் என்று ராமாயணம் சொல்கிறது. மும்பையில் இருந்து புசாவல் செல்லும் = ரெயில் தடத்தில், நாசிக் ரோட் என்ற பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது.


கிஷ்கிந்தா

வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த வானர நகரம் இதுவாகும். கர்நாடகத்தில் இருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி ரெயில் வழித்தடத்தில் அமைந்த முக்கியமான ரெயில் நிலையம், ஹான்ஸ்பேட். இந்த இடத்தின் அருகேதான். கிஷ்கிந்தா ராஜ்யம் அமைந்திருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ராமேஸ்வரம்

ராமபிரான் இங்கிருந்துதான், இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்தார். பின்னர் வெற்றிக்கொடி நாட்டி திரும் பியதும், இங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றை செய்து வழிபட்டார். அந்த மணல் லிங்கம்தான் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவிலின் மூலவராக இன்றளவும் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News