வழிபாடு

திருவட்டார் ஆஞ்சநேயர் கோவிலில் 108 சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி

Published On 2023-05-21 03:43 GMT   |   Update On 2023-05-21 03:43 GMT
  • 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
  • ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவட்டாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைப்பு மற்றும் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று காலை குழந்தைகள் நலனுக்காகவும், ஆன்மிகத்தில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளவும் ஆஞ்சநேய சனீஸ்வர ஹோமம் நடந்தது. ஆஞ்சநேய சாமி அறக்கட்டளை மற்றும் ஆஞ்சநேய சாமி கோவில் நிறுவனர் ஆஞ்சநேய சித்தர் ஹோமத்தை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, கவச மந்திரம் வழங்கப்பட்டது.

மாலையில் திருவட்டார் சந்திப்பில் இருந்து பஞ்சவாத்தியம் முழங்க, முத்துக்குடைகளுடன் 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆஞ்சநேய சித்தர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 48-வது மடாதிபதி மூப்பில் சாமியார் ஸ்ரீபுஷ்பாஞ்சலி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை அகில இந்திய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீராமானந்தா சுவாமிகள் முன் சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழும் முறை, வாழ்க்கையில் மேன்மையடைய செய்ய வேண்டியவை, கடவுள் பக்தியின் சிறப்பு ஆகியவை குறித்து சன்னியாசிகள் சிறப்புரையாற்றினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News