வழிபாடு

பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் உலா

Published On 2022-11-25 05:34 GMT   |   Update On 2022-11-25 05:34 GMT
  • இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
  • இன்று தங்கத்தேரோட்டம் நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.

அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

வாகனச் சேவையில் பங்கேற்று சோர்வடைந்த உற்சவர் பத்மாவதி தாயாருக்கு நிவாரணம் வழங்க நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தனநீரை தெளித்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

Similar News