வழிபாடு

புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு ரத்னஅங்கி அலங்காரம்

Published On 2022-09-12 06:24 GMT   |   Update On 2022-09-12 06:24 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் மூலஸ்தானம் புற்று மண்ணால் உருவானது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இந்த ஆண்டு குடமுழுக்கிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் அம்மனுக்கு உகந்த நாளான ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை காண அதிகளவில் திரண்ட பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசனம் செய்வதற்காக பொதுவழி, சிறப்புவழி என இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இருவழிகளின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.

கோவில் பிரகாரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தன்னார்வலர்களும் ஏராளமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதுமட்டுமின்றி முடிகாணிக்கை, மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடனை செலுத்தினர். அதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கோவிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

Tags:    

Similar News