வழிபாடு
மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தை சுற்றி நீர் நிரப்பும் பணி

மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தை சுற்றி நீர் நிரப்பும் பணி

Published On 2022-06-03 05:42 GMT   |   Update On 2022-06-03 05:42 GMT
மீனாட்சி அம்மன் கோவில் புதுமண்டபத்தை சுற்றி நீர் நிரப்பும் பணி நடந்தது. வசந்த உற்சவ விழா இன்று தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலைநாயக்கர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர். இந்த விழா நடக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்று முற்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.

விழா நாட்களை தவிர மற்ற காலங்களில் இந்த மண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, அங்கு பூஜை பொருள் கடைகள், துணிக்கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் செயல்பட்டு வந்தன. வணிக மண்டபமாக மாறியதால் அதன் சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது. எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை பக்தர்கள் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தன. இதையடுத்து கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று மண்டபத்தை சுற்றிலும் நீர் நிரப்பி, பாரம்பரிய வழக்கப்படி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

அதன்படி விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

பின்பு 4 சித்திரை வீதிகளிலும் சுவாமி-அம்மன் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே புதுமண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

விழாவுக்காக மண்டபத்தை சுற்றிலும் சோதனை முறையில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. எனவே தண்ணீர் நிற்கும் பாதைகளை சரி செய்து அங்கு நேற்று மதியம் முதல் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரப்பப்படுவதால் அந்த தண்ணீர் அங்கு சரிவர நிற்கவில்லை. எனவே அதற்கான காரணங்களை கண்டறிந்து என்ஜினீயர்கள் மூலம் அதனை சீரமைக்கும் பணியை செய்ய உள்ளனர். மேலும் மண்டபம் முழுவதும் தோரணங்கள் கட்டியும், வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுற காட்சி அளிக்கிறது. இனி வரும் காலத்தில் வசந்த உற்சவ திருவிழா சிறப்பான முறையில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News