வழிபாடு
பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி விளக்கம்

Published On 2022-05-26 08:37 GMT   |   Update On 2022-05-26 08:37 GMT
விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக ‘உ’ என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.
முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் ‘உ’ என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும். செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக ‘உ’ என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.

இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்களில், ‘உ’கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை ‘பிள்ளையார் சுழி’ என்றும் சொல்வார்கள். விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக ‘உ’ என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு. விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.

‘உ’ என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது. வட்டத்தைத் தொடர்ந்து வரும் கோடு வளைந்து, பின் நேராகச் செல்லும். இதனை ‘ஆர்ஜவம்’ என்பார்கள். இதற்கு ‘நேர்மை’ என்று பொருள். ‘வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே’ என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News