வழிபாடு
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா

பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா

Published On 2022-04-18 05:33 GMT   |   Update On 2022-04-18 05:33 GMT
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். பல வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

கடந்த 13-ந் தேதி சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15-ந்தேதி நடந்தது.

தெப்ப உற்சவ விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி பாளையங்கோட்டை சிவன் கோவில் அருகே உள்ள தெப்பகுளம் தண்ணீர் நிரப்பப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திரிபுராந்தீஸ்வரர்- கோமதியம்பாள் கோவிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பகுளத்தில் மேளதாளம் முழங்க 11 சுற்றுகள் வலம் வந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்ப திருவிழாவையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News