வழிபாடு
வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்

வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-18 10:05 IST   |   Update On 2022-04-18 10:05:00 IST
வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகவும், ராமர் திருத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கிறது.

தஞ்சை மாவட்ட எல்லையாகவும், திருவாரூர் மாவட்டத்தின் தொடக்கமாகவும் உள்ள வடுவூரில் அமைந்திருக்கும் கோதண்டராமர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலில் ராமநவமி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் கோதண்டராமர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். சூரிய பிரபை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அருள்பாலித்த கோதண்டராமரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவில் கருடசேவை, திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

அப்போது வில் ஏந்திய திருக்கோலத்தில் கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன் சமேதராக தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரடி ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேரில் கோதண்டராமருக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின்னர் அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வீதிகளில் வலம் வந்த பின்னர் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து கோவில் அருகே உள்ள சரயுபுஷ்கரணி தெப்ப குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News