வழிபாடு
பெங்களூரு கரக திருவிழாவையொட்டி தர்மராயசாமி கோவிலில் தேரோட்டம்

பெங்களூரு கரக திருவிழாவையொட்டி தர்மராயசாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2022-04-18 09:37 IST   |   Update On 2022-04-18 09:37:00 IST
திருவிழாவையொட்டி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
பெங்களூரு திகளரபேட்டையில் 800 ஆண்டுகள் பழமையான தர்மராயசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கரக திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கரக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் தர்மராய சாமி கோவிலில், கரக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திருவிழாவுக்காக மாநகராட்சி ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் கரக திருவிழா தொடங்கியது. பின்னர் தினந்தோறும் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரக ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு தொடங்கியது.

பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த கரகத்தை, வழக்கம்போல தியானேந்திரா என்பவர் சுமந்து சென்றார். கோவிலில் இருந்து புறப்பட்ட கரக ஊர்வலம் வழக்கம்போல் மஸ்தான் சாப் தர்காவுக்கு சென்றது. பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்ற கரகம் நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. கரகம் கோவிலுக்கு வந்ததும் திரவுபதி-பஞ்சபாண்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நேற்று காலை கரக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ஆடி, அசைந்து வந்த தேரின் மீது பக்தர்கள் பழங்களை வீசி வழிபட்டனர். மேலும் கோவிலின் முன்பு கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி கோவில் முன்பு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

திருவிழாவையொட்டி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Similar News