வழிபாடு
முருகப்பெருமான், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்

முருகப்பெருமான், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்

Published On 2022-04-18 09:02 IST   |   Update On 2022-04-18 09:02:00 IST
மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடன் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக கடந்த 14-ந்தேதி மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.இதற்காக கடந்த 13-ந்தேதி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் தனது தாய் தந்தையான மீனாட்சி அம்மன்- சுந்தரரேசுவரர் திருமணத்தில் பங்கேற்பதற்காக முருகப்பெருமான் தெய்வானையுடன் புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் 14, 15,16, ஆகிய 3 நாட்கள் மதுரையிலேயே தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முருகப்பெருமான் தெய்வானையுடனும், பவளக் கனிவாய்பெரும்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது.மேலும் மகா தீப தூப ஆராதனை நடந்தது.அவை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இதனையடுத்து வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த பூப்பல்லக்கில் முருகப்பெருமான்தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதேபோல பல்லக்கில் பவளக்கனிவாய் அமர்ந்து அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருப்பரங்குன்றம் நோக்கி சுவாமி புறப்பட்டன. வழி நெடுகிலுமாக திருக்கண்கள் அமைத்து சுவாமியை பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர். இரவில் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார்.

Similar News