வழிபாடு
தேர்களில் எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2022-04-15 07:31 IST   |   Update On 2022-04-15 10:23:00 IST
சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மதுரை :

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி சென்றது பார்ப்பவர்களை பரவசம் அடையச்செய்தது.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.

மீனாட்சி அம்மனுக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவையும் நடைபெற்றன.

சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலை 7.32 மணிக்கு சுவாமி தேர் இழுக்கப்பட்டது. 8.15 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் இழுத்தனர்.

தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி -சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.

சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 12 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு தென் மாவட்ட ஐ.ஜி. அஸ்ராகார்க், போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை சிறப்பாக செயல்படுத்தினர்.

தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். மாலை (16-ந் தேதி) தேவேந்திர பூஜை நடக்கிறது. உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது.

இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமிணய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிக்கலாம்...சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

Similar News