வழிபாடு
மாசி மக தீர்த்தவாரியையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

மாசி மக தீர்த்தவாரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல் அமைப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-02-14 12:02 IST   |   Update On 2022-02-14 12:02:00 IST
மாசிமகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடப்பதையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடலோர பகுதியில் பொதுமக்கள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்யப் படுகிறது. தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், ராமகிரு‌‌ஷ்ணா நகர் ஹயக்ரீவர், காசிபாளையம் சரபேஸ்வர், பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர், மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாசி மகத்தையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தீர்த்தவாரி நடக்கும் வைத்திக்குப்பம் கடற்கரை மற்றும் சாமிகள் வரும் பாதைகளை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கங்க வராக நதீஸ்வரர், காசிவிசுவநாதர் கோவில், காலாப்பட்டு, பாகூர் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Similar News