வழிபாடு
கோவில் மூடப்பட்டு உள்ளதால் கோவில் வாசலிலேயே பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபடுவதை படத்தில் காணலாம்.

தைப்பூச திருவிழா: முருகன் கோவில் வாசல்களிலேயே வழிபட்டு சென்ற பக்தர்கள்

Published On 2022-01-19 01:39 GMT   |   Update On 2022-01-19 01:39 GMT
அரசின் உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் வாசலிலேயே முருகனை வழிபட்டு சென்றனர். அதேவேளை மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை அரசின் உத்தரவின்பேரில் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலான 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதேவேளை வழக்கமான பூஜைகள் அந்தந்த கோவில் வழக்கப்படி நடத்தப்பட்டன. பொதுமக்களும் கோவில்களின் வாசல்களிலேயே நின்று இறைவனை தரிசித்து சென்றனர். அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் இந்துக்களின் சிறப்புக்குரிய நிகழ்வான தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தின்போது முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த நாளில் மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அரசின் தடை உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் நேற்று மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. அரசின் தடை உத்தரவு காரணமாக கோவிலின் நுழைவுவாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆனாலும் பக்தர்கள் நுழைவுவாயில் முன்பே விளக்கேற்றி வழிபட்டனர். நுழைவுவாயிலின் முன்பாக உள்ள வேலில் பூக்களை வைத்தும் பூஜித்தனர். இதனால் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள குளக்கரை அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே மாவிளக்கு ஏந்தி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மஞ்சள் சேலை அணிந்தபடி பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். சிலர் வாகனங்களிலும் வந்தனர்.

கோவிலின் உள்ளே தான் மக்கள் செல்லமுடியவில்லையே தவிர கோவிலை சுற்றிலுமே பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கோவில் கோபுரத்தை தரிசித்த பக்தர்கள், கோவிலை சுற்றியும் வலம் வந்து வேண்டி சென்றதை பார்க்க முடிந்தது. அதேவேளை பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகத்தை சுற்றியிருந்த கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

தைப்பூசத்தையொட்டி பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சிலர் கற்கண்டு, மாவிளக்கு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை பக்தர்களுக்கு அளித்தனர். கோவில் பிரசாதமே கிடைத்தது போல பக்தர்கள் அதை வாங்கி சாப்பிட்டதை பார்க்க முடிந்தது. பக்தர்கள் அனுமதி இல்லாவிட்டாலும் கோவிலில் வழக்கமான பூஜை நடந்தது. பூஜையின் போது அர்ச்சகர்கள் ஓதும் வேத மந்திரங்கள் ஒலித்ததை கேட்டதும், பக்தர்கள் வெளியே இருந்தே, ‘அரோகரா.... அரோகரா...’ என்று பக்தி முழக்கம் எழுப்பினர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கோவில் வளாகம் அருகே வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்தும், அதேவேளை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறும் பெண் போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.

இதேபோல பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் போன்ற சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவில் வாசல்களிலேயே ‘அரோகரா...’ கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “தைப்பூச நாளில் முருகனை வழிபட முடியவில்லை என்ற மனக்குறை இருந்தாலும், தெய்வம் குடியிருக்கும் கோவில் கோபுரத்தையாவது வணங்கிட மவந்தோம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதற்கேற்றார்போல தைப்பூச நாளில் கோவில் கோபுரத்தை வழிபட்டு செல்கிறோம். சீக்கிரம் இந்த கொரோனா பேரிடர் ஓய்ந்து பழைய நிலைமை திரும்பவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும் இருக்கிறது’’, என்றனர்.

அதேவேளை நகர் பகுதிகளில் உள்ள சிறிய முருகன் கோவில்களிலும் நேற்று தைப்பூசத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பலர் கோவில்களுக்கு பால்குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும், அலகு குத்தி செல்வதையும் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொதுவாகவே தைப்பூச தினத்தன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கோவில்கள் நேற்று திறக்காத நிலையிலும் கோவில் வளாகங்கள் பக்தர்களால் நிறைந்திருந்ததை பார்க்க முடிந்தது.
Tags:    

Similar News