வழிபாடு
த்ராயண வாசல் திறக்கப் பட்டதையும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உத்ராயண வாசல் திறப்பு

Published On 2022-01-17 09:53 IST   |   Update On 2022-01-17 09:53:00 IST
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவிலில் உத்ராயண வாசல் திறக்கப்பட்டது. உத்தராயண வாசல் தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த 3-வது தலமாக விளங்குகிறது. பூலோக வைகுண்டமாக போற்றப்படும் சாரங்கபாணி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் கோலத்தில் சாரங்கபாணி அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இங்கு பெருமாளுக்கு ஆராவமுதன் என்ற பெயரும் உண்டு. தாயார் கோமளவள்ளி. ஹேமரிஷி தவம் செய்த தலம். அவர் பெயரால் விளங்கும் ஹேமபுஷ்கரணியில் கோமளவள்ளி, பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக தேருடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை வணங்கினால் முக்தி கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இங்கு சொர்க்கவாசல் கிடையாது. இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலை கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்த நிலையில் உத்ராயண வாசலுக்கு எதிரே சாரங்கராஜா பூமி தேவி, ஸ்ரீ தேவியுடன் எழுந்தருள உத்ராயண வாசலுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து உத்ராயண வாசல் திறக்கப்பட்டது. உத்தராயண வாசல் தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News