வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2021-12-20 04:31 GMT   |   Update On 2021-12-20 04:31 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 8.15 மணிக்கு தொடங்கி நேற்று காலை 10.22 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பவுர்ணமிக்கும் கொரோனா காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் ஏராளமான பக்தர்கள் தடையை மீறி மாற்றுப் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று முன்தினம் கிரிவலப்பாதையில் சென்றவர்களை தடுத்த போலீசாரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். தொடர்ந்து நேற்றும் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுத் தரிசனம் மட்டுமின்றி, கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொதுத் தரிசனம் வழியில் சென்றவர்கள் நீண்ட நேரமானதால் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News