வழிபாடு
இன்று அதிகாலை கோவிலில் தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள் கூட்டம்.

மார்கழி மாத பிறப்பு: அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு

Published On 2021-12-16 12:28 IST   |   Update On 2021-12-16 12:28:00 IST
பஜனைக் குழுவினர் இசை வாத்தியங்களை முழங்கியபடி தெருத்தெருவாக சென்று பக்தி பாடல்களை பாடி சென்றனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மாதங்களில் மார்கழி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதம் தெய்வ தரிசனத்திற்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது.

திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மார்கழி மாதம் அதிகாலை நேரம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான மார்கழி மாதம் இன்று பிறந்தது.

இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு திருவெம்பாவை விளக்க உரை சமயச் சொற்பொழிவு நடைபெற்றது. நல்லாசிரியர் சீனிவாச வரதன் சொற்பொழிவாற்றினார். அதனை பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.



மேலும் திருவண்ணாமலையில் வீடுகள் தோறும் பெண்கள் அழகிய கோலங்களை போட்டு மார்கழி மாதத்தை வரவேற்று இருந்தனர். பஜனைக் குழுவினர் இசை வாத்தியங்களை முழங்கியபடி தெருத்தெருவாக சென்று பக்தி பாடல்களை பாடி சென்றனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் திரளாக சென்று வழிபட்டனர்.

இன்று அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு சென்று வந்ததால் மிகவும் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள இந்துக் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன திருவண்ணாமலையை அடுத்த பர்வதமலையில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அங்கு சென்ற பக்தர்கள் மலைகோவிலை பார்த்து வணங்கி விட்டு சென்றனர். பர்வதமலை வந்த பக்தர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர்.

Similar News