வழிபாடு
நீள்முடி கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்

நீள்முடி கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்

Published On 2021-12-10 08:23 GMT   |   Update On 2021-12-10 08:23 GMT
நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.

4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான 6-ம்தேதி நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

4-ம் நாளான 7-ம் தேதி நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

5-ம் நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர கைக்காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

6-வது நாளான நேற்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
Tags:    

Similar News