வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அஷ்டோத்திர சத கலசாபிஷேக பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் அஷ்டோத்திர சதகலசாபிஷேகம்

Published On 2021-12-04 08:47 GMT   |   Update On 2021-12-04 08:47 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனை நிறைவடைந்ததையொட்டி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு லட்ச வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரில் அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடந்தது. அதற்காக 108 கலசங்களில் புனித நீரை நிரப்பி சிறப்புப்பூஜைகளும், ஹோமமும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி சமர்ப்பித்து, நைவேத்தியம, மகா தீபாராதனை நடந்தது.

மேலும் பிரதான கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக தலைமீது சுமந்து ெசன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் கலசத்தில் நிரப்பப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி முன்பு கும்பம் வைத்து தீப, தூப மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் நடத்தப்பட்ட லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தப்பட்ட மங்கல பொருட்களை மேள தாளம் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து சொர்ணமுகி ஆற்றங்கரை வரை கொண்டு சென்றனர். ஆற்றங்கரையில் வைத்து அந்தப் பொருட்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி சொர்ணமுகி ஆற்றில் கரைத்தனர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News