வழிபாடு
சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் திரு ஏடு வாசிப்பு நடைபெற்ற போது எடுத்த படம்

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடுவாசிப்பு திருவிழா தொடக்கம்

Published On 2021-12-04 08:09 GMT   |   Update On 2021-12-04 08:09 GMT
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு திருஏடு வாசிப்பு தொடர்ந்து வாகன பவனியும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட கார்த்திகை மாத திருஏடுவாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது.

விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும் 5 மணிக்கு திருநடை திறப்பும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடையும் நடைபெற்றது. மதியம் உச்சிப்படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருஏடுவாசிப்பை பால. ஜனாதிபதி தொடங்கி வைத்து, விளக்க உரையாற்றினார். பால.யோகாதிபதி முன்னிலை வகித்தார். திருஏட்டை ராஜன், ஆதி நாராயணன் ஆகியோர் வாசித்தனர்.

பின்னர் வாகன பவனியும் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை வக்கீல் யுகேந்த் மற்றும் வைகுந்த் ஆகியோர் செய்தனர். விழாவில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வருகிற 17-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 19-ந் தேதி அய்யா வைகுண்டர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு திருஏடு வாசிப்பு தொடர்ந்து வாகன பவனியும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News