வழிபாடு
ஆயிரங்கால் மண்டபத்தில் பந்தல் அலங்காரம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்

Published On 2021-12-02 06:56 GMT   |   Update On 2021-12-02 06:56 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. 14-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மறுநாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

வருகிற 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.
Tags:    

Similar News