ஆன்மிகம்
அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

Published On 2021-10-21 03:08 GMT   |   Update On 2021-10-21 03:08 GMT
தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 600 கிலோ காய்கனி மற்றும் இனிப்பு வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, விநாயகர், முருகன், கருவூரார், நடராஜர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உள்ளன. இந்த பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் உலகிலேயே மிகப் பெரியதாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பெருவுடையார், 13 அடி உயரம், 23½ அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.



இத்தகையை சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் செய்வதற்காக 750 கிலோ பச்சரிசி, 600 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.

அன்னாபிஷேகம் முடிந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News