ஆன்மிகம்
அனுமன்

அனுமனுக்கு கிடைத்த தெய்வீக வரங்கள்

Published On 2021-05-10 08:45 GMT   |   Update On 2021-05-10 08:45 GMT
குபேரன், ‘அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டான்’ என்றார். சிவபெருமான், ‘தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார்.
அனுமன் குழந்தையாக இருந்த போது, அவருக்கு அதிகமாக பசி எடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு முறை அவனது தாய் அஞ்சனை உணவு எடுத்து வர கொஞ்சம் தாமதமாகியது. அப்போது சூரியன் வானத்தில் எழுந்து பொன்னிறமாக தகதகத்துக் கொண்டிருந்தான். அதை ‘ஏதோ ஒரு பழம்’ என்று நினைத்த அனுமன், அதைப் பறித்து உண்ணலாம் என்ற நோக்கத்தில், வானை நோக்கி எம்பினான். அவனுக்குள் இருந்த சக்தி அவனை, வானத்தை நோக்கி உந்தித் தள்ளியது. அவன் சூரியனை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தான்.

ராம அவதாரத்திற்கு பிற்காலத்தில் பெரும் உதவியாக இருக்கப் போகும் பாலகன் என்பதால், அனுமனின் மீது தன்னுடைய வெப்பத்தை சூரியன் காட்டவில்லை. அதுவும் அன்று சூரிய கிரகணம் நிகழவிருந்தது. அந்த கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக ராகு, சூரியனை நோக்கி சென்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த அனுமன், ராகுவையும் பிடிக்க நினைத்தார். இதனால் பயந்து போன ராகு, இந்திரனை வேண்டினான். தேவர்களின் தலைவனான இந்திரன், தன்னுடைய ஐராவதம் யானையின் மீது வந்து அனுமனை தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால் முடியவில்லை. கோபத்தில் தன்னுடைய வஜ்ஜிராயுதம் கொண்டு அனுமனின் தாடையில் தாக்கினான். இதையடுத்து அனுமன் சுயநினைவை இழந்து பூமியில் வந்து விழுந்தான்.

இந்திரனால் தன்னுடைய மகன் தாக்கப்பட்டதைக் கண்டு கோபம் கொண்ட வாயு பகவான், தன்னுடைய இயக்கத்தை நிறுத்தினார். இதனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்பட்டன. இதற்கு தேவர்களும் கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட... அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

அனுமனைக் கண்டு பரிதாபமும், இரக்கமும் கொண்ட பிரம்மா, தனது கரத்தால் அவனைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் சுயநினைவு வந்து எழுந்தார். பின்னர், பிரம்மதேவன் அனைத்து தேவர்களையும் நோக்கி, “இந்த பாலகனால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரங்களைக் கொடுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்” என்று சொன்னார்.

இதையடுத்து சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக உறுதி செய்தார். வருணன் - ‘காற்றாலோ, நீராலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார். எமதர்மன், ‘எம தண்டத்தாலோ, நோய்களாலோ அனுமன் பாதிக்கப்படமாட்டான்’ என வரமருளினார். குபேரன், ‘அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டான்’ என்றார். சிவபெருமான், ‘தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார்.

விஸ்வகர்மா, ‘தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ அனுமன் பாதிக்கப்பட மாட்டான்’ என்றார். பிரம்மதேவர், ‘ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பான்’ என்று அருளினார். மேலும், ‘விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ கிடையாது. நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும்’ என்பது போன்ற வரங்களையும் கொடுத்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் மீண்டும் தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.
Tags:    

Similar News