ஆன்மிகம்
கள்ளழகர்

மண்டூக முனிவருக்கு இன்று கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கிறார்

Published On 2021-04-29 07:00 GMT   |   Update On 2021-04-29 07:00 GMT
அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் இன்று சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி மாலையில் தொடங்கியது. இதைதொடர்ந்து 24, 25-ந் தேதிகளிலும் சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் 4-ம் திருநாளில் எதிர்சேவையும், கள்ளழகர் திருக்கோலமும், 5-ம் திருநாளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகருக்கு ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது. நேற்று 6-ம் திருநாளில் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நந்தவன ஆடி வீதி வழியாக புறப்பாடாகி வலம் வந்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இன்று(வியாழக்கிழமை) காலையில் 10 மணிக்கு கருடவாகனத்தில் அழகர் புறப்பாடும், புராணம் வாசித்தல், மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நாளை பூப்பல்லக்கு விழாவும், மே 1-ந் தேதி அர்த்தமண்டப சேவையும், 2-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியும், திருமஞ்சனமும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News