ஆன்மிகம்
எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில்

எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா 2-வது ஆண்டாக நிறுத்தம்

Published On 2021-04-17 08:59 GMT   |   Update On 2021-04-17 08:59 GMT
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடியில் 2-வது ஆண்டாக சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்றது பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில். எடப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது சாமி திருக்கல்யாணமும், 4 நாட்கள் தேரோட்டமும் நடைபெறும்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் எனவும், சாமி திருக்கல்யாணம் 25-ந் தேதியும், தேரோட்டம் 26 -ந்தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் எனவும் திருவிழாக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் கோவில் திருவிழாக்கள், மத சடங்குகள் நடப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடியில் 2-வது ஆண்டாக சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News