ஆன்மிகம்
தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றதையும், உற்சவர் கற்பகமூர்த்தி வெள்ளி மூஷிக வாகனத்தில் அருள்பாலிப்பதையும் காணலாம்

பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் இல்லாமல் தீர்த்தவாரி உற்சவம்

Published On 2021-04-15 08:40 GMT   |   Update On 2021-04-15 08:40 GMT
கொரோனா கட்டுப்பாடு காரணமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களின்றி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மேலும் சமூக இடைவெளி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக இந்த விழா எளிமையாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான கோவில்களில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்படவில்லை.

இருப்பினும் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப் பாடுகளை பின்பற்றி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு மேல் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோவில் திருக்குளத்தில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் டிரஸ்டிகள், பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குளக்கரையில் அஸ்திரத்தேவர் மற்றும் அங்குசத்தேவருக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீதர் குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் மூலவர் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகள் நேரம் தவிர மற்ற நேரங்களில் குறைவான பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போதிய சமூக இடைவெளியுடனும், கட்டாயம் முக கவசம் அணிந்தும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று பிள்ளையார்பட்டி கோவிலில் குறைவான பக்தர்கள் மட்டும் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி ராமசாமி செட்டியார் மற்றும் வலையப்பட்டி நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெற்றன. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போதிய சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News