ஆன்மிகம்
முத்துமாரியம்மனை பல்லக்கில் பக்தர்கள் சுமந்து வருவதையும், பெண்கள் பொங்கல் வைப்பதையும் படத்தில் காணலாம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

Published On 2021-03-31 04:45 GMT   |   Update On 2021-03-31 04:45 GMT
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) இரவு 7.25 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.

திருவிழாவையொட்டி தினமும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

திருவிழாவை காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர்.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் பானை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே விருந்து வைத்து சாப்பிட்டனர்.

விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) இரவு 7.25 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (1-ந்தேதி) அன்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (2-ந்தேதி) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News