திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு
பதிவு: டிசம்பர் 04, 2020 12:12
சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. கடந்த 29-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் 30-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றப்பட்டது.
இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.