ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர்

சமூக வலைதளங்களில் வைரலாகும் அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை காட்சி

Published On 2020-12-02 07:01 GMT   |   Update On 2020-12-02 07:01 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பல அடியார்களால் போற்றி பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். இந்து கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறையை படமோ, வீடியோவோ எடுக்க கூடாது என்பது முன்னோர்களின் அறிவுரையாகும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையை படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்ற விதிமுறை பலஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை மீறி மறைமுகமாக போட்டோ எடுத்த ஒரு சிலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 29-ந் தேதி தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், பரணி தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. அன்று வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கோவில் கருவறை அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் கோவில் கருவறையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவில் சிவாச்சாரியார்களிடம் வீடியோவில் வரும் காட்சிகள் அருணாசலேஸ்வரர் கோவில்தானா? என்று கலந்து பேசி உறுதி செய்துவிட்டு யார் அந்த வீடியோவை எடுத்தது என்று விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றனர்.
Tags:    

Similar News