ஆன்மிகம்
கார்த்திகை தீபத்திரு விழா: 6-ம் நாளில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

கார்த்திகை தீபத்திரு விழா: 6-ம் நாளில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

Published On 2020-11-26 03:03 GMT   |   Update On 2020-11-26 03:03 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் 6-ம் நாளில் 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவிலில் நாயன்மார்களுக்கு பூஜைகள் நடந்தன. கொட்டும் மழையிலும் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கோவிலில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் போது பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் சாமி தரிசனம் செய்ய வரும் குறிப்பிட்ட நபர்களை அனுமதித்து உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் இருந்து பஞ்சமூர்த்திகள் 5-ம் பிகாரத்திற்கு செல்லும் போது சாமியுடனே அவர்களும் செல்ல முயன்றனர்.

மேலும் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்ற சாமி புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு திரண்டு இருந்தனர். ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின்போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். இந்த ஆண்டு 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. ஆனால் கோவிலில் உள்ள நாயன்மார்கள் உற்சவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் பிரகாரத்தில் கொட்டும் மழையில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.

நேற்று திருவண்ணாமலையில் மழை பெய்தது. சாமியின் உற்சவ உலா மழையில் நனைந்தபடி நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்தி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்கு தீப கொப்பறை தயார் செய்யப்பட்டு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News