ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கொடி ஏற்றம் நடைபெற்ற போது எடுத்த படம். (உள்படம்: மலர் அலங்காரத்தில் அம்மன்)

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-08-15 09:45 GMT   |   Update On 2020-08-15 09:45 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோவில் குருக்கள், கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், பெரியகோவில் செயல் அலுவலர் மாதவன், மாரியம்மன்கோவில் மேற்பார்வையாளர் செந்தில்குமார், தலைமை கணக்கர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 23-ந் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 30-ந் தேதி அன்னவாகனத்திலும் அம்மன்புறப்பாடு நடைபெற உள்ளது. அடுத்தமாதம்(செப்டம்பர்) 6-ந் தேதி சிம்மவாகனத்திலும், 7-ந் தேதி பெரியகாப்பு படிச்சட்டத்திலும் அம்மன்புறப்பாடு என தொடர்ந்து 8 நாட்களுக்கு அம்மன்புறப்பாடு நடக்கிறது.

இந்த புறப்பாடுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும். கடந்த ஆண்டை போல் வெளியில் புறப்பாடு இல்லை. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தேரோட்டம், தெப்பத்திருவிழா நடைபெற வாய்ப்பில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News