ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவிலில் புதிய கொடிமரம் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிய கொடிமரம் தயார் செய்யும் பணி தீவிரம்

Published On 2020-01-22 02:45 GMT   |   Update On 2020-01-22 02:45 GMT
தஞ்சை பெரியகோவிலில் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி புதிய கொடிமரம் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடந்த 1996-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் வருகிற 5-ந் தேதி காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி பெரியகோவிலில் பாலாலயம் கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி நடந்தது. தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், நந்தி பெருமான் ஆகிய சன்னதிகளுக்கு முன்பு கொடிமரம் அமைந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த கொடிமரம் தேக்கு மரத்தால் ஆனது. இந்த கொடிமரத்தை சுற்றிலும் உலோகம் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கொடிமரத்தை சுற்றி இருந்த உலோகம் கழற்றப்பட்டு பாலீஷ் போடப்பட்டு வருகிறது.

இந்த கொடிமரத்தின் பீடம் மட்டும் 4½ அடி உயரம் கொண்டது. அதற்கு மேல் 28½ அடி உயரத்தில் கொடிமரம் இருந்தது. அடிப்பகுதியில் கொடிமரம் சேதமடைந்து இருந்ததால் பழைய கொடிமரம் அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக புதிய கொடிமரம் நடப்படுகிறது. இதற்காக சென்னையில் பர்மா தேக்கு மரத்தை ரூ.9 லட்சத்திற்கு அதிகாரிகள் வாங்கினர்.

இந்த தேக்குமரம் சென்னையில் இருந்து லாரி மூலம் திருவெறும்பூரில் உள்ள மர அரவை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுக்கப்பட்டது. 40 அடி உயரத்தில் உள்ள மரம், லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கொடிமரம் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதிய கொடிமரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் 4½ அடி உயரத்திலும், ருத்ர பாகம் 28½ அடி உயரத்திலும் தயார் செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் பழைய பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் 1 வாரத்துக்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக நடந்துவருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் கொடிமரம் அமைக்கப்பட்டு, ஏற்கனவே கொடிமரத்தில் சுற்றப்பட்டு இருந்த உலோகம் பொருத்தப்படும்.
Tags:    

Similar News