ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலை மகிமை

Published On 2019-12-22 12:18 GMT   |   Update On 2019-12-22 12:18 GMT
பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலையை அருணையம்பதி, முக்திபதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்.

பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலையை அருணையம்பதி, முக்திபதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். சுமார் 2664 அடி உயரமுள்ள திருவண்ணாமலையை தட்சணகைலாசம் என்றும் கூறுவதுண்டு.

திருவண்ணாமலை பல மலைகள் இணைந்த ஒன்றாகும். இந்த மலைகளை வலம் வருவதற்கு 14 கிலோமீட்டர் நீளப்பாதை உள்ளது. திருவண்ணாமலை, சிவபெருமானின் அருவ வடிவமாகும். மலையின் அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், அண்ணாமலையார் ஆலயம் அமைந்துள்ளது. விண்ணுயர நிற்கும் ராஜகோபுரம் கோவிலின் கிழக்கில் அமைந்துள்ளது. அது 216 அடி உயரம் கொண்டதாக 11 நிலைகளுடன் உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டினார்.

இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இங்கு சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரு தீர்த்த குளங்கள் உள்ளன. 56 திருச்சுற்றுகளைக் கொண்டது திருவண்ணாமலைத் திருக்கோவில். கருவறைத் திருச்சுற்றில் 14 லிங்கமூர்த்தங்களும், 63 நாயன்மார்களும், சிவனடியார்களும், சப்தமாதர்களும் தெய்வ மூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளனர்.

கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் வட்டவடிவமான ஆவுடையார் மீது லிங்க உருவிலே அண்ணாமலையார் எழிலாகக் காட்சி தருகின்றார். அவரை பிரதட்சிணமாக வந்து இடப்புறம் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம். சன்னதியிலுள்ள மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்ப வேலைபாடுகள் சிந்தையை நிறைக்கின்றன. உண்ணாமுலை அம்மனை தரிசித்துவிட்டு அங்குள்ள நவக்கிரகங்களையும் சுற்றி வந்தால் நலன் கோடி விளையும்.

திருவண்ணாமலைத் தலத்தில் மலையே சிவன். சுயம்புவாக எழுந்த அக்னிமலை நாளடைவில் கல் மலையாக மாறியது. இம்மலையில் உள்ள செடி, கொடி, மரங்கள் அனைத்துமே மருத்துவப் பயனுள்ள மூலிகைகளாகும். மலையில் பல குகைகள் உள்ளன. சிறியதும், பெரியதுமாக உள்ள இந்த குகைகளில் துறவிகளும், முனிவர்களும், சித்தர்களும் தவநிலையில் வீற்றிருப்பதைக் காணமுடியும். பிரசித்தி பெற்ற அக்னித்தலமான திருவண்ணாமலையில் நாள்தோறும் திருவிழாக் கோலம்தான்.

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும் திருநாள் கார்த்திகைத் திருவிழாவாக 13 நாட்கள் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. ‘‘திருவண்ணாமலை தீபம்’’ என்று இந்த விழா சிறப்பித்து கூறப்படுகிறது. இது இறைவனை ஜோதியாக, சுடராக, தீபமாக, விளக்காகப் போற்றித் துதிக்கும் திருவிழா. திருவண்ணாமலையில், கார்த்திகைத் திருநாளன்று பஞ்சமூர்த்திகள் சன்னதிக்கு வெளியில் வந்து நின்றதும், அண்ணாமலையில் அகண்டதீபம் ஏற்றப்படும்.

மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சராக இருந்தவர் வேங்கடபதிராயர். அவர் 1745-ம் ஆண்டு அண்ணாமலை தீபம் ஏற்றுவதற்காக வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை ஒன்றை வழங்கினார். அந்த கொப்பரை பழுதடைந்ததால் தற்போது வேறு ஒரு கொப்பரையில் மலைமீது தீபம் ஏற்றுகிறார்கள். இந்தக் கொப்பரையில், கிலோக்கணக்கில் நெய் வார்த்து புதுத் துணியால் திரி செய்து தீபம் ஏற்றுவார்கள்.

அண்ணாமலை தீபம் குறைந்தபட்சம் ஒருவராம் வரை தொடர்ந்து சுடர்விடும். 13 நாட்கள் கொண்டாடப்படுகிற கார்த்திகை தீபத்திருவிழா முதல் மூன்று நாட்கள் துர்க்கை கோவிலிலும் அடுத்து வரும் பத்து நாட்கள் அண்ணாமலையார் கோவிலிலும் நடைபெறும்.

சிவ வடிவமாக விளங்கும் இந்த மலையை தரிசிப்பதும் வலம் வருவதும் புனிதமானதாகும். கிரிவலம் வருவதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாட்களே. எனினும் சித்திரை முதல் நாளும், சிவராத்திரி தினமும், பவுர்ணமி திதியும் உகந்தவையாகும்.

அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு கோபுர வாயிலை தரிசித்து விட்டு பின்பு கிரிவலம் செய்ய வேண்டும். பூத நாராயண பெருமாள், இரட்டை விநாயகரை வணங்கி கிரிவிலம் தொடங்குவது மிக, மிக நல்லது.

இடையில் எங்கும் நிற்காமல் நிறுத்தாமல் தொடர்ந்து கிரிவலம் வர வேண்டும். முடிவில் கிழக்கு வாயிலில் நிறைவு செய்ய வேண்டும் என்பது நியதி. பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் ஜீவ சமாதியடைந்த இடத்தையும் வலம் வரும் போது காணலாம். பல சுனைகளும், பாறைகளும், தீர்த்தங்களும், கோவில்களும், சமாதிகளும் நிறைந்தது திருவண்ணாமலை கிரிவலப்பாதையாகும். மனதை ஒருநிலைப் படுத்தி வலம் வந்தால் நிச்சயமாக சித்தர் பெருமக்களின் ஆசியைப் பெறலாம்.
Tags:    

Similar News