ஆன்மிகம்

கிருஷ்ணர்-குசேலர் நட்பு

Published On 2019-05-29 10:09 GMT   |   Update On 2019-05-29 10:09 GMT
கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். இவர்களின் நட்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். திருமணமாகி அவருக்கு 27 குழந்தைகள் பிறந்ததால் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.
குசேலரின் மனைவி சுசீலை. கணவர் மனம் நோகாதபடி குடும்பம் நடத்தினார்.

ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனைவருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.

உடனே சுசீலை குசேலரிடம், குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றார். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக்கொண்டார். ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார். குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை கவனித்துவிட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.

கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார். மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருநாளைத் தான் “அட்சய திருதியை” திருநாள் என்றழைக்கிறார்கள்.
Tags:    

Similar News